Monday, December 31, 2012

வட போச்சே !!!




2012 இன் இரண்டாம் பதிவுகடைசி பதிவும் கூடஇந்த வருட அனுபவங்களை ஒரு பதிவாக எழுதனும்னு  ஆசைஆசைய நிறைவேற்ற இப்போதைக்கு முடியலைனாலும் ஒரு சின்ன அனுபவத்தயாவது எழுதி இந்த வருஷத்த முடிக்கலாமேன்னு இந்த கூகுள் டைப்பிங்கோட போராடிக்கிட்டு இருக்கேன் . போராடினு டைப் பண்ணா போரடினு டைப் ஆவுதுபோராடினு டைப் பண்றதே ஒரு பெரிய போராட்டமாவுல இருக்குசரி எப்பதாமா நீ விஷயத்துக்கு வருவன்னு நீங்க மனசுல நெ னைக்குறது எனக்கு புரியுதுமனமிருந்தா அடுத்த பாராவ படிங்க . 

ஒரு நாள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வீட்ல இருந்து கெளம்பினேன். வீட்டுக்கு பக்கத்தல ஆட்டோ நின்னுச்சு. எவ்வளவு ஆகும்னு கேட்டேன்.150 ரூபா ஆகும்னார். சரி எதுக்கு காசு செலவு பண்ணனும்னு பஸ்ல போகலாம்னு முடிவு பண்ணேன். ஆனா பஸ் ஸ்டாண்டுக்கு எப்பிடியும் ஆட்டோலதான் போகணும். அதுக்கு 35 ரூபா. பஸ்ல போனா 35+8= 43. 150-43= 107 ரூபா சேமிக்கலாம்னு ஆடோவுல ஏறி பஸ் ஸ்டாண்ட் போனேன். 21 L பஸ்ல ஏறி ஒக்காந்தேன் . மணி காலை 8.15 ஆச்சு . பஸ் கெளம்புன பாடு இல்ல. 9 மணிக்கு பல் கலைக்கழகத்துல கையெழுத்து போடணும். சரி 8.30 வரைக்கும் பாக்கலாம்னு இருந்தேன். மணி 8. 30 ஆச்சு. இதுக்கு மேல காக்க முடியாதுன்னு ஆட்டோவுல போக முடிவு செஞ்சேன். 200 ரூபா கேட்டாரு. தல கிறுகிறுன்னு சுத்த ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு ஆட்டோவ கேட்டுபாத்தேன். 210 ரூபான்னு சொன்னாரு. கண்ண கட்றகுதுக்குள்ள 200 ரூபா கேட்ட ஆட்டோவுல ஏறினேன் . ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்போது 21 L பஸ்சும் ஸ்டார்ட் ஆச்சு. சரி பஸ் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னு போகும். ஆட்டோவுல போனா விர்ருன்னு போயிரலாம்னு மனச தேத்திக்கிட்டேன். நான் நெனச்ச மாதிரி 21 L பஸ் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னுச்சு. இங்கதான் ஸ்டோரில ஒரு டுவிஸ்ட்டு. நம்ம ஆட்டோ ஓட்டுனர் என்ன பன்னாரு . அந்த பஸ்ச ஓவர்டேக் பண்ணாம அதுக்கு பின்னாடியே போனாரு. சரி ச்டாபிங்ல ஓவர்டேக் பண்ணுவார்னு பாத்தா இவரும் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னு நின்னு போனாரு. சப்பா !!! வந்த டென்சன வெளிகாட்டாம அந்த பஸ்ல இருந்துதான் எறங்கி ஆட்டோவுல ஏறினேன்ற விஷயத்த சொன்னேன். அப்பயும் ஒன்னும் பிரயோஜனப்படல. மனுஷன் சரி நிதானம்ல. ஆட்டோவுல இருந்து எறங்குபோது பாத்தா 21 L பஸ்சும் அப்பத்தான் அண்ணா பல்கலைக்கழக ச்டாபிங்ல இருந்து கெளம்புச்சு. என்ன ஒரு பத்து மீட்டர் தூரம் நடக்க வேண்டி இருக்கல .அம்புட்டுதேன். ஆனா அதுக்கு நான் 192 ரூபா (200-8=192) அதிகமா குடுத்திருகேன்னு நெனைக்கும் போது மனசு லைட்டா கலங்குது. ஒழுங்கு மரியாதையா வீட்டு பக்கத்லையே ஆட்டோ ஏறி இருந்தா 150 ரூபாவோட போயிருக்கும். 35+ 200 =235 ரூபா தண்டம். சரி 9 மணிக்கு கையெழுத்தாவது போட்டேனா? அதுவும் இல்ல . சில நேரத்ல ஓவர் சிக்கனமா யோசிச்சா இப்பிடி லம்ப்பா ஆப்பு வருது . என்ன பண்றது. விதி வலியது . 



இந்த பதிவின் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது ? அப்டின்னு நீங்க நெனச்சீங்கன்னா  எப்பவும் போல எதுவும் நான் சொல்ல வரல. இந்த வருஷத்துல இன்னொரு பதிவு எழுதனும்னு  நெனச்சேன் . எழுதிட்டேன் . அவ்ளோதான் . இவ்ளோ தூரம் படிச்ச உங்க மன தயிரியத்த  மதிக்கிறேன் . அதுக்கு தங்களுக்கு என்னோட நன்றிகள் மற்றும் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . ஏதோ என்னால முடிஞ்சது .





Thursday, August 25, 2011

மூக்கு கண்ணாடி ஆசைகள் ....



நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பூவுல எழுதறேன் ...அதுக்கு எனக்கு நானே ஒரு குட் சொல்லிக்குறேன்...
அத முடிச்சிட்டு எழுதலாம், இத முடிச்சிட்டு எழுதலாம்னு கடைசில எதையும் முடிக்க முடியல . சரி எழுதவாவது செய்வோம்னு ஆரம்பிச்சாச்சு.இந்த மொக்கைய ஆல்ரெடி செல்வாகிட்ட போட்டாச்சு.. சரி மத்தவங்ககிட்டயும் பகிரலாமேன்னு இத ஆரம்பிக்கிறேன்...

சின்ன வயசுல அதென்னமோ அந்த மூக்கு கண்ணாடி மேல ஒரு விருப்பம். மூக்கு கண்ணாடி மாட்டி இருக்றவங்க எல்லாரும் அழகா இருக்காங்கனு ஒரு நெனப்பு. நம்மளால கண்ணாடி போட முடியலயேன்னு ஒரு வருத்தம் வேற . சரி நம்ம தான் கண்ணாடி போடல . நம்ம அப்பா அம்மா கூட போட மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் .

அப்போ ரெண்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்னு நெனைக்குறேன். அப்பா கண் டாக்டர பாக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு . அன்னிக்கெல்லாம் ஒரே குஷி . நம்ம அப்பாவும் கண்ணாடி போடப் போறாருன்னு ஒரு குதூகலம்.கண்ணாடி போட்ட அப்பாவ பாக்க தெருவிலயே காத்துகிட்டு இருந்தேன். பக்கத்துக்கு வீட்டு பிரண்ட்ஸ் கிட்ட ஒரே பெரும வேற. ஆனா அப்பா கண்ணாடி போடாம நடந்து வரத பாத்து பொசுக்குனு ஆயுடுச்சு. ஏம்பா கண்ணாடி போடலன்னு ஒரே அழுக. ஒரு நாள் ,ஒரு வழியா அப்பாவும் கண்ணாடி போட்டாரு.ஆனா அப்பா மத்த அப்பா மாதிரி எப்பவும் கண்ணாடி போடாம படிக்கும்போது மட்டும் போடறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.அவர் போடாத நேரத்துல அந்த கண்ணாடிய போட்டு பாத்து அந்த மன கஷ்டத்த சந்தோஷமா மாத்திக்குவேன்.

சின்ன வயசுல இருந்து நமக்கு எப்போ வயசாகும்,கண்ணாடி போடலாம்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்திட்டே இருக்கும் .இதலாம் ஏதோ சின்ன வயசுல நடந்துச்சு . சோ மன்னிசிரலாம்னு வச்சுகோங்க .
பி .இ. படிக்கும்போதுகூட நான் அடங்கல. கண்ணு வலிக்குது சரியா தூர இருக்கிறது தெரியல டாக்டர்ட கூட்டிட்டு போங்கன்னு ஒரே ராவடி.டாக்டரும் தூரத்தல இருக்ற எழுத்து தெரியுதான்னு டெஸ்ட் பண்ணாரு.அதுல பாசும் ஆயாச்சு.அப்றோம் ஏம்மா இங்க வந்தேன்னு டாக்டர் கேட்டாரு.இல்ல இத விட தூரத்துல இருக்கிறது தெரியலன்னு சொன்னேன். அதுக்கு டாக்டரு, ஒனக்கு மட்டும் இல்ல அது யாருக்குமே தெரியாது, போயிட்டுவாமான்னு சொல்லிட்டாரு.ஒரே ஏமாத்தமா போச்சு.அது அந்த டாக்டருக்கு புரிஞ்சுருக்கும் போல. 0.25 பவர்ல கண்ணாடி வேணா போட்டுக்கோன்னு சொல்லிட்டாரு.நானும் கொஞ்ச நாள் போட்டுக்கிட்டு திரிஞ்சேன் .சீ இந்த பழம் புளிக்கும்னு அப்றோம் போடறது இல்ல .

அப்றோம் வேற என்ன? மொக்க முடிஞ்சது. அடுத்த மொக்கைப் பதிவில் சந்திப்போம்.. படிச்சதுக்கு மிக்க நன்றி :)

Thursday, February 10, 2011

மொக்கை பதிவு ஒன்று



ஹய்யா தமிழுக்கு மட்டுமே தனி வலைப்பூ தொடங்கிட்டேன் :)
இப்பிடி ஏதாது செஞ்சாதான் தமிழ்ல நெறைய எழுதலாம் .அது இல்லாம தமிழ் மணம் போன்ற வலைத்தலங்கள்ள பதிவு செய்ய முழுக்க முழுக்க வலைப்பூ தமிழ்ல இருக்க வேண்டி இருக்கு.
மொத மொதல்ல எழுதுறோம்.என்ன எழுதலாம்னு யோசிச்சா பெருசா ஏதும் தோனல.(எப்பவும் போல !)சரி எப்போதும் போல வாழ்க்கையில நடக்ற மொக்க விஷயங்களையே எழுதிடலாம்னு முடிவு பண்ணி அடுத்த பத்தில அத எழுதி இருக்கேன்.முடிஞ்சா படிங்க :)

எனக்கு நண்பர்கள் கொஞ்சம் அதிகம்.ஆனா அத்தன நண்பர்கள் கிட்டயும் தொடர்ந்து காண்டக்ட்ல இருக்க முடியறது இல்ல.இத கூட கம்யூனிகே ஷன் கேப்னு ஆங்கிலத்துல சொல்லுவாங்களே அதான் அதேதான்...ஆனா கொறஞ்ச பட்சம் ஒரு மின்னஞ்சல் வருடத்திற்கு ஒரு முறையாவது (பிறந்த நாள் வாழ்த்துதான் வேறன்ன ?) அனுப்பிச்சுடுவேன். நண்பர்களும் அப்படித்தான். ஆனா சில நண்பர்கர்கள் கிட்ட மாதம் ஒரு முறை அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறைன்னு தொலை பேசி மூலம் பேசிடுவேன். இதுல சில நண்பர்கள சந்திக்க அல்லது தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள படுற பாடு இருக்கே.ரொம்ப கஸ்டம்.

என்னோட நெருங்கிய தோழி அனிதாவோட கொழந்தைய பாக்க ரெண்டு வருஷமா அவ கிட்ட போராடுறேன். கொழந்த பள்ளிக்கூடமே போகப் போகுது. அநேகமா கொழந்தையோட கல்யாணத்துக்கு போவேன்னு நெனைக்குறேன்.அனிதாவ சொல்லி குத்தமில்ல.அவளோடசூழ்நிலை அப்பிடி. அவ சொல்ற நேரத்துக்கு நான் போக முடியல. நான் சொல்ற நேரம் அவளுக்கு செட் ஆகல.

இதுக்கு நடுவுல என்னோட இன்னொரு தோழி அபிக்கு கொழந்த பொறந்தது. அதுக்கும் போக முடியல. சரி இப்போ என்னம்மா ஒனக்கு வேணும்னு நீங்க யோசிக்குறது புரியுது. நான் என்ன சொல்ல வரேன்னா நெலம இப்பிடி இருக்க அபிக்கு நெறைய கால்ஸ் என்ன அறியாமையே நான் பண்ணிட்டேன்.அது எப்பிடின்னு நீங்க கேக்கலாம்.அங்கதான் ஒரு ட்விஸ்ட்டு இருக்கு.(இத எங்க நண்பர்கள் பாஷையில "டுச்ட்டு" அப்பிடுன்னு சொல்லுவோம் ) அபியோட பேரு மொதல்ல தொலை பேசில்ல ஸ்டோர் ஆகி இருக்கறதால அப்பிடி ஆகிருச்சு. சரி ஒரு சாரி மெசேஜ் அனுப்பலாம்னு யோசிப்பேன். சரி பரவால்ல அப்பிடியாவது அவ கால் பண்ணட்டும்னு விட்டுட்டேன்.சரி ரொம்ப நாள் இப்பிடி தெரியாம கால் போனதால அபி நம்பர ரெண்டாவது நம்பரா ஸ்டோர் பண்ணிட்டேன். ஏம்மா அது எப்பிடி தெரியாம பல தடவ நீ கால் பண்ணுவன்னு நீங்க கேக்கலாம். நாங்கள்லாம் அப்பிடித்தான். போன் கையில இருந்தா அத சுத்தி சுத்தி வெளையாடி போனுக்கே தல சுத்துற அளவுக்கு பண்ணிருவோம் .

இப்பிடியே நாள் போக அபி ஒரு ரெண்டு மாசம் கழிச்சு கால் பண்ணினா. அவ சொன்னா," சாரி சுபா ரொம்ப நாள் நீ எனக்கு பேச ட்ரை பண்ண ஆனா கொழந்தையோட பிசியா இருந்ததால அட்டென்ட் பண்ண முடியல". நான் வேற என்ன சொல்றது. நான் சொன்னேன்... "நானும் ரொம்ப சாரி அபி.தெரியாம நம்பர் அழுத்திட்டேன்னு சொன்னேன்". அபி சம டென்ஷன் ஆயிருப்பான்னு நெனைக்குறேன்.ஆனா அவ வெளியில காட்டிக்கல.குட் கல்:) ஆனா இன்னிக்கு வரைக்கும் அபியோட கொழந்தையையும் பாக்க முடியல. எனக்கும் நேரம் இல்ல. அவளுக்கும் நேரம் இல்ல..என்ன பண்றது. சரி ஏதோ அப்பிடி இப்பிடின்னு டச்லயாவது இருக்கோமேன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டேன் .பின்ன ஆறு வருஷ பழக்கமாச்சே. நான் முதுகலை பட்டம் வாங்க என்னோட சேத்து ஒழச்ச ஜீவன்களின் எண்ணிக்கை ஆறு . அதுல இந்த அபி, அனிதா, அப்புறம் வாணி, புனிதா மற்றும் செல்வா குழுவினர் அடக்கம்.இவங்கள்லாம் என்ன ராப்பகலா படிக்க வச்சு பாஸ் பண்ண வச்ச கதைய இன்னொரு பதிவுல எழுதுறேன்.

சரி நீ கடைசில என்னதாம்மா சொல்ல வரன்னு நீங்க யோசிக்கலாம். கடைசில கருத்து சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல இல்லியா.நேரம் கொஞ்சம் கெடச்சுது. சரி ஏதாது எழுதனுமேன்னு எழுதுனேன் அவ்ளோதாங்க.ஆனா ஒண்ணுங்க. பொதுவாத்தான் மொக்க போட்டேன் .அதுல நீங்க வந்து மாட்டுவீங்கன்னு நான் சத்தியமா நெனைக்கல.முடிஞ்சா இன்னொரு மொக்க பதிவுல சந்திப்போம்.