Monday, December 30, 2019

ஜோஷ் கல்ச்சுரல்ஸ் அனுபவங்கள்


வருஷத்தோட கடைசி நாள் . கல்லூரிக்கு  லீவு போட்டாச்சு ! சரி காலையில எழுதணும்னு தோணுச்சு. ரொம்ப நாளா எழுத யோசிச்சு வச்ச விஷயம்தான் . நேரம் இன்மையினால முடியல. எப்பவும் போல ஆங்கிலத்துல எழுத ஆரம்பிச்சேன். அப்போதான் தோணிச்சு , தமிழ்ல எழுதி ரொம்ப நாள் ஆச்சு .எனக்கு ரொம்ப போர்  அடிச்சா சில நேரங்கள்ல என் பிளாக்க  நானே படிப்பேன். அப்டி படிக்கும்போது எனக்கு என் ஆங்கில வலைப்பூவை விட தமிழ் வலைப்பூ தான் பிடிக்கும். ஆனா தமிழ்ல எழுத யோசிக்குறோமேன்னு கில்டியா இருந்துச்சு . சரி தலைப்புக்கு வருவோம் . சில நாள் முன்ன எங்க கல்லூரில ஜோஷ்  அப்டினு ஒரு கலை விழா நடந்துச்சு . அது ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்கிற  விழா . பல போட்டிகள் நடக்கும் .வருடா  வருடம் நடக்கும் . பாட்டு  போட்டி, சமையல், மெஹந்தி , பெயின்டிங் , கவிதை, பேச்சு  போட்டி, ராம்ப்  வாக் அப்டினு நெறய போட்டிகள் இருக்கும் . இந்த மாதிரி எந்த நான் - டெக்கினிக்கல்   விஷயங்கள்லயும் நான் கலந்துக்கறது  இல்ல. அது ஏன் அப்டினு எனக்கே தெரியல . இந்த வருஷம், என் கூட வேலை செய்ற தோழி ஹெலன் , (என் பிளாட் நண்பரும் கூட )அவங்க சொல்லி நான் ரெண்டு போட்டில பேர் குடுத்தேன் . கவிதை மற்றும் பாடல் போட்டி. வெற்றி  பெறலனாலும் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு . அந்த  அனுபவத்தை பத்தினதுதான் இந்த பதிவு !

ரெண்டு போட்டிக்கும் கூகுள் பாம்ல பில் பண்ணிட்டேன்னே  ஒழிய போட்டில கலந்துக்கணும் அப்டிங்குற எண்ணம் பெருசா இல்ல. அன்னிக்கு என்ன தோணுதோ பாத்துக்கலாம்னு இருந்தேன் . முதல கவிதை போட்டிதான் நடந்துச்சு . அரை மணி நேரம் குடுத்தாங்க . தலைப்பை போட்டி ஆரம்பிக்கும் முன்ன தான் குடுத்தாங்க . டான் டு டஸ்க் ( காலை முதல் மாலை வரை ). ஆங்கில கவிதை போட்டிக்கும் தமிழுக்கும் ஒரே தலைப்பு. கவிதை அப்டினாலே எனக்கு உலகத்தின் இரு மாபெரும் கவிதைகள் நினைவுக்கு வரும் .

"ஒரு சுவீட் ஸ்டாலு பணியாரம் சாப்பிடுகிறது . ஆச்சரியக்குறி :) " அப்பறோம் "மரத்திலிருக்குது காய் , மரத்திலிருக்குது காய்...." . இது உங்களுக்கு புரியலைனா மன்னிக்கவும் . நீங்க ஆதித்யா டி.வி பாக்கறது இல்லனு நினைக்குறேன் . இந்த கவிதை மாதிரி நாமளும்  எழுதிரப்போறோம்னு  ஒரே பயம். போட்டி அன்னிக்கு காலையில் "விடியல் " அப்டிங்குற தலைப்புல ஒரு  கவிதை எழுதி பிராக்டீஸ் பண்ணேன்.  அந்த வர்க் அவுட் ரொம்ப உதவியா இருந்துச்சு 

போட்டி ஆரம்புச்சு பெருசா ஏதும் தோணல . அப்புறம் எப்டியோ எழுதிட்டேன் . அந்த கவிதை கீழே .

கலையும் கனவுகளின் தொடக்கமாய் 
விடிகிறதே  ஒவ்வொரு நாளும் !

சலிப்புடன் சில நாள் ...
சிலிர்ப்புடன்  சில நாள் ...
அலுப்புடன் சில நாள்..
இதயக் களிப்புடன் சில நாள்... 
விடிகிறதே  ஒவ்வொரு நாளும் ...

அமைதி நிலவும்  அதிகாலையிலே  ...
மனமது தேடும் எதையோ !
எனையே  முதலாய் என்றெனை  அழைக்கும் கொட்டைவடிநீர் !
சிற்றுண்டி  முதல் சமைத்து மதிய உணவு பிறகு முடித்து முடிகிறது என் முதல் பரிமாணம்!

கல்லூரி பேருந்து ஏறும் அக்கணம் எடுக்கும் மறு  பரிமாணம் !
கல்விதனை கற்பித்து ஆய்வுகள் சில செய்து
கழிகிறது என் பிற மணித்துளிகள் ...
வீடடையும்  போதினிலே மாறுகிறதே பரிமாணமதுவும் !

பூங்காவில் குழந்தையுடன்  குழந்தையாய்  மனமெடுக்கும் மறு  பரிமாணம் !
விட்டு வைத்த  வீட்டு வேலைகள் வீட்டு பாடமென
கழிகிறது என் நாளின் கடை பொழுதுகள் ...
பரிமாணங்கள் பலவெனினும்  கோணங்கள்
புதிதெனினும் சிரிப்பொன்றை நான் உதிர்க்க
மகிழ்வதனை  மனமேற்க
முடிகிறதே என் நாளும்
விடை காண்கிறதே கலைந்திட்ட  என் காலைக்  கனாவும் !


கவிதையை படித்தமைக்கு நன்றி.

அடுத்த நாள் பாட்டு போட்டி . கலந்துக்க போறது இல்லனு முடிவு செஞ்சுட்டேன் . ஆடிட்டோரியம்ல எல்லார் முன்னாடி பாட பயமா இருந்துச்சு . இதுக்கு முன்னாடி மினி ஹால் எங்க துறை  கான்பெரன்ஸ்  கல்ச்சுரல்ஸ்ல  பாடி இருக்கேன். ஆனா இது ஒட்டு மொத்த எஸ். ஆர். எம். இன்ஜினியரிங் , மெடிக்கல், டென்டல், ஆர்ட்ஸ்  , லா அப்டினு  எல்லாருக்குமே சேத்து நடக்குற போட்டி, எப்டினு யோசிச்சு போட்டிக்கு போல . ஹெலன் கால் பண்ணிட்டே இருந்தாங்க . போட்டி ஆரம்பிக்க போகுது வாங்கனு சொன்னாங்க . நான் கேக்கல . அப்போ ரெண்டு சக ஆசிரியைகள் ஐடா மற்றும் சவுமியா  என் ரூமுக்கு வந்தாங்க .ஏன் போலன்னு கேட்டாங்க . பயமா இருக்குன்னு சொன்னேன் . பாடி காமிக்க சொன்னாங்க . பாடுனேன். என்ன வலு கட்டாயமா ஆடிட்டோரியம்ல கூட்டிட்டு போனாங்க . ஹெலனுக்கும் போன் பண்ணி சொல்லிட்டேன் .
அவங்களுக்கும்  சந்தோஷம் . ஓரளவுக்கு பாடிட்டேன் . வீட்டுல கிச்சன்ல பாடுவேன். செல்வா கேட்டா  அவருக்கு புடிச்ச  இளையராஜா பாட்டு பாடுவேன் . பிளாட்ல நடக்குற விழால சும்மா பாடுவேன் . ஆனா அவ்ளோ பெரிய அரங்கத்துல பாடுற அளவுக்கு சிங்கர் இல்ல அதுவும் மைக்ல பாடி பழக்கம் இல்ல . ஆனா அன்னிக்கு நண்பர்கள் கட்டாயப்படுத்தி பாடுனேன் . ஆனா ரொம்ப காண்பிடண்ட்டா   இருந்துச்சு . சூப்பரா பாடலை . ஆனா புடுச்சு இருந்துச்சு . நெறய பேர்  குட்ஜாப்னு சொன்னாங்க . சில நேரங்கள்ல நம்மள உற்சாகப்படுத்துற ஊக்குவிக்குற நண்பர்கள் இருப்பது முக்கியமா ஆகுது . அவங்க அப்போ இழுத்துட்டு போலனா எனக்கு இந்த அனுபவம் கெடச்சுருக்காது . ஹெலன் அவங்க ப்ரண்ட்ஸ்கிட்டலாம் வீடியோவை போட்டு காட்டுனாங்களாம்.



ஒண்ணு  மட்டும் தெரிஞ்சுகிட்டேன் . பாசிட்டிவான நண்பர்கள் , மனிதர்கள் எவ்ளோ பேர்  நம்மள சுத்தி இருக்காங்களோ அவ்ளோ நல்லது . இப்போல்லாம் நெகடிவான மனிதர்களை நெறய தவிர்க்குறேன் . யாரையும் உதாசீன படுத்துறது இல்ல . காயப்படுத்துறதும் இல்ல .அது நம்ம வேலையும் இல்ல . ஆனா பாசிட்டிவ் மனிதர்கள கண்டரியிற அறிவை நெறய வளத்துக்க  ட்ரை பண்ணிட்டு இருக்கேன் . (செல்வா மயிண்டு வாய்ஸ் :"கிழிச்ச! ஒனக்கு ஒண்ணும் தெரியாது ..:) ) அவரை பொறுத்தவரை  என்னால மனிதர்களை கணிக்க முடியாது எல்லாரும் என்ன ஈஸியா  ஏமாத்திடுவாங்க . ஓரளவுக்கு உண்மையினாலும் இப்போ நெறய மாறி இருக்கேன் . சரி பாப்போம் .

படித்தமைக்கு மிக்க நன்றி . தங்களுக்கும்  தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள் :)

சுபலலிதா